states

img

செங்கொடி பறக்கும்; வங்கம் சிவக்கும்!

இந்திய மக்களுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கும் மூன்றடுக்கு உள்ளாட்சி முறையான பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கொடையளித்த ஆட்சி மேற்கு வங்க இடது முன்னணி அரசு.

நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் அளித்த நிலச்சீர்திருத்த சட்டத்தின் முன்னோடி ஆட்சி அது. இப்படி அதன் பெருமைகளை நாளெல்லாம் பேச முடியும்.

தொடர்ந்து ஆளும்வர்க்க எதிரிகள் மத்தியில் ஆண்டாலும் 1976ல் பங்களா காங்கிரஸ் அரசில் பங்கேற்றது முதல் 2011 வரை ஜோதிபாசு தொடங்கி 10 ஆண்டு புத்ததேவ் ஆட்சி என 34 ஆண்டுகளாக செங்கொடி பறந்த காலம். இலவு காத்த கிளிகளாம் எதிரிகளுக்கு அந்த சந்தர்ப்பம் வாய்த்தது. அது தான் நந்திகிராம்.

அங்கே லட்சுமண் சேத் போன்ற கருங்காலிகளும் மம்தாக்களும் நக்சல்களும் ஆளும் வர்க்கமும் ஒருசேரக் களமிறங்கி இறங்கி அடித்தார்கள்.

நந்திகிராமை கைப்பற்றியவர்களை முறியடிக்கிறோம் என்ற பெயரில் போலீஸ் துப்பாக்கி சூட்டை நடத்த நமது நிலமெடுப்பு நியாயங்கள் குழிதோண்டி புதைக்கப்பட்டன.

செங்கொடியின் மைந்தர்கள் வெட்டுப்பட்டார்கள்; அலுவலகங்கள் கைப்பற்றப்பட்டன; 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி குடும்பங்கள் சொந்த ஊர்களை விட்டு, மண்ணை விட்டு அகதிகளாய் துரத்தப்பட்டார்கள்.

ஒருவழியாக எதிரிகள் செங்கொடியின் ஆட்சிக்கு முடிவுரையை எழுதினார்கள். நாம் எல்லா வகையிலும் கைவிடப்பட்டோம்.

அதன்பின்னர் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 220 தோழர்கள் கொடூரமாய் கொல்லப்பட்டுள்ளார்கள். கை கால் இழந்தோர், கடும் காயங்கள் பட்டோர் சொத்துக்களை இழந்தோர் சொந்த மண்ணை இழந்தோர் பல்லாயிரம் பேர்.

செங்கொடி இயக்கத்தின் தோல்வி வெறும் தேர்தல் தோல்வி அல்ல என்பதை காலம் கண்ணீரால், ரத்தத்தால் எழுதி வைத்துள்ளது. நிற்க!

இவ்வளவு பெரிய தோல்வியில் இருந்து வெறும் பத்தாண்டுகளில் மீண்டுவிட முடியுமா... கடினம் தான். கடந்த 10 ஆண்டுகளில் நடந்த எல்லா தேர்தல்களிலும் தோல்வி தான்.

கடந்தமுறை ஆயிரம் வாக்குகளுக்குள் குறைந்த வித்தியாசத்தில் தவறவிட்ட தொகுதிகள் 40க்கும் மேல். அப்படியானால் இந்தமுறை வெல்ல வாய்ப்பு உண்டா... தெரியாது.

ஆனால் களத்தில் ஒரு மாற்றம் தெரிகிறது; அது வெற்றியாக உருமாற்றம் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். இப்போது சிபிஎம்- மில் புதிய இளைஞர்கள் படை ஒன்று முன் வரிசைக்கு வந்திருக்கிறது.

அதில், தீப்சிதாவும் ஆய்ஷி கோஷூம் "ஆஸாதிகள்". டெல்லி ஜவஹர்லால்நேரு பல்கலைக் கழகத்தில் படைதிரட்டி பாசிஸத்தை அதன் குகையிலே சந்தித்தவர்கள். மீனாட்சி முகர்ஜியும், ஸ்ரீஜன் பட்டாச்சார்யாவும் வங்கத்தின் வாலிபர், மாணவர் படையின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இதேபோல் இன்னும் பலநூறு வங்கத்தின் சிங்கங்கள் களத்தில்....

சமீபத்திய மாதங்களில் சிபிஎம் ஊழியர்கள் நந்திகிராம் உள்ளிட்டு மிட்னாப்பூர், புரூலியா போன்ற பல மாவட்டங்களில் பத்தாண்டுக்கு முன் திரிணாமூல் குண்டர்களிடம் இழந்த 100க்கும் மேற்பட்ட கட்சி அலுவலகங்களை திரும்ப கைப்பற்றி செங்கொடி ஏற்றியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான கட்சிக் குடும்பங்கள் தங்கள் சொந்த மண்ணுக்கு திரும்பியுள்ளனர். இத்தனை நகர்வுகளும் மம்தா ஆட்சியில் உள்ளபோதே நடந்திருக்கிறது.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் சிங்கூர் நந்திகிராமில் நமது ஸ்ரீஜனும், மீனாட்சியும் கூட, வாழ்விழந்து, உயிர்களை இழந்து வாடிக்கிடக்கும் அந்த மக்களிடம் தான் கண்ணீர் கதைகளை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லி உத்வேகம் ஊட்டிக்கொண்டிருக்கிறார்கள். வங்க மொழி புரியாத நமக்கே அந்தக் காட்சிகள் மெய்சிலிர்க்கின்றன.

இந்தத் தேர்தலில் வெல்வார்களா என்று நீங்கள் கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாய்ச் சொல்ல முடியும்; நாளைய வங்கமும், ஏன் இந்தியாவும் இதுபோன்ற செங்கொடிப் புதல்வர்களின் கரங்களில் பத்திரமாய் இருக்கும்!

- சூர்யா, கோவை.

;